சோல்: மனித உரிமைகள் பற்றி அமெரிக்கா ஏதேனும் குறை கூறினால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரிய அரசின் நிர்வாகத்தில் மனித உரிமைகள் பிரச்சினைகள் உள்ளதென அமெரிக்கா சொன்னால் விபரீதமாகிவிடும் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறியதை வடகொரியாவின் அதிகாரத்துவ ஊடகமான ‘கேசிஎன்ஏ’ நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் ஆதரவில் புதன் கிழமை அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், வடகொரியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமைகள் மீறல் குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பியோங்யாங்கின் ஐக்கிய நாட்டு தூதர் இதனை மறுத்திருந்தார்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று திங்கட்கிழமை அன்று வடகொரியாவுக்கான சிறப்பு அமெரிக்க தூதர் ஸ்டீவன் பீகன் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வடகொரிய வெளியுறவு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.