வாஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நேற்று முன்தினம் ஆக்ககரமான பேச்சு நடந்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் குறித்து இரு தரப்பினரும் இணக்கம் காண முயற்சி நடைபெற்று வருவதாக திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஹாங்காங்கிலும் வேறு சில இடங்களிலும் அமெரிக்காவின் தலையீடு குறித்து அதிபர் ஸி குறைகூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
ஒப்பந்தப்படி அமெரிக்க பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் அளவை சீனா பெருமளவில் அதிகரித்துள்ளதாக திரு டிரம்ப் டுவிட் செய்திருந்தார். இருப்பினும் ‘முதல் கட்டம்’ என்று கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை உறுதிபடுத்திக் கையெழுத்திடும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை.
“அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார். அதிபர் ஸி இந்த முன்னேற்றத்தை வரவேற்பதாக ‘சின்ஹுவா’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
‘முதல் கட்டம்’ என்று கூறப்படும் ஒப்பந்தத்தின் இந்த ஒரு பகுதியின்படி, அமெரிக்காவின் வேளாண்மை மற்றும் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி அளவை சீனா அதிகரிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் சீனப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான வரிகளை அமெரிக்கா தளர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
முழுமை அடையாத மொழிபெயர்ப்பையும் சட்டரீதியிலான ஆவணங்களையும் சுட்டி, ஒப்பந்தத்தின் விவரங்களை அதிகாரிகள் இன்னமும் எழுத்துபூர்வமாக உறுதிசெய்யாத நிலையில், முதல் கட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே சீன, அமெரிக்க உறவின் நிலைத்தன்மை, மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கிய பங்காற்றியுள்ள வர்த்தகத்தை சீன அதிபர் பாராட்டியதாக ‘சின்ஹுவா’ அறிக்கை கூறியது.
இதனால் உலகப் பொருளியலும் உயரும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் கவலைகளுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவமும் கவனமும் அளிக்க சீனா விரும்புவதாக அதிபர் ஸி கூறியுள்ளதாக ‘சின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.