ஹாங்காங் குடிமக்கள் கிறிஸ்மஸ் வாரத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர். முக்கிய நகரப்பகுதிகளிலுள்ள மொத்தம் ஐந்து கடைத்தொகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்கவுள்ளன.
கடந்த வாரயிறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. கறுப்பு உடை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசார் மீது செங்கற்களையும் கண்ணாடியையும் வீசியதாகவும் பதிலுக்குப் போலிசார் மிளகுப்பொடி தெளிப்பிகளைப் (pepper spray) பயன்படுத்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. போலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியை நீட்டி கூட்டத்தினரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. பிரிட்டனின் முன்னைய காலனியாக இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது ஹாங்காங்கிற்கு உறுதி செய்யப்பட்ட உரிமைகள் மீறப்படுவதாக ஹாங்காங் மக்கள் பலர் கருதுகின்றனர்.
ஹாங்காங்கிலுள்ள குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடங்கிய இவ்வாண்டின் ஆர்ப்பாட்டங்கள், சீனாவின் மீதான ஹாங்காங்கின் ஒட்டுமொத்த அதிருப்தியைப் பிரதிபலிக்கும் விதமாக மாறியுள்ளன. சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸிங்ஜியாங் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்ட உய்கர் முஸ்லிம் மக்களுக்கும் ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.