கம்போடியாவின் ஸ்வே ரியங் மாநிலத்தின் பவெட் நகரைச் சேர்ந்த போலிஸ் துணைத் தலைவர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) கைது செய்யப்பட்டு மாநில நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு முன்தினம் டா பாவ் கிராமத்தில் பெண் உணவக உரிமையாளர் ஒருவரை அந்த 30 வயது போலிஸ் அதிகாரி சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
“நீதிமன்றத்தின் அரசாங்க வழக்கறிஞர் அவரை விசாரித்து வருகிறார். விசாரணை எப்போது முடிவடையும் எனத் தெரியவில்லை,” என்று மாநில நீதிமன்றப் பேச்சாளர் டெப் பல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பெண், சமாங் டேன் உணவகத்தின் உரிமையாளரான 38 வயது சொயுன் டேன் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட அப்பெண், வியட்னாமிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் கடுமையான காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போதைப்பொருள் குற்றங்களைக் கையாண்டுவந்த சந்தேக நபர், உணவக உரிமையாளரை ஒருமுறையும் ஆகாயத்தை நோக்கி ஒருமுறையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பிச்செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை போலிசார் விரைவில் பிடித்துவிட்டனர்.
“உணவக உரிமையாளர் மெதுவாகச் சேவை வழங்கியதால் அவரைச் சுட்டதாகச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. போலிசார் அவரை விசாரணை செய்த பிறகு ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்,” என மாநிலப் போலிஸ் தலைவர் கொயிங் கோர்ன் கூறினார்.