சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பற்றி எரிந்த கட்டுக்கடங்காத புதர்த் தீ, அந்த வட்டாரத்திலுள்ள ஏராளமான திராட்சைத் தோட்டங்களை அடியோடு அழித்துவிட்டது. இதனால், பெரும் இழப்பைச் சந்தித்துள்ள ஒயின் உற்பத்தியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக நன்கொடை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மலைப்பகுதியில் இருந்த திராட்சைத் தோட்டங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் திரு டேவிட் பௌலியின் 29 ஹெக்டர் திராட்சைத் தோட்டமும் அடங்கும்.
“எங்களது வரலாற்றில் இது ஆக மோசமான நாள். முழுவதுமாக மனமுடைந்து போயுள்ளேன்,” என்று கூறிய திரு பௌலி, எரிந்துபோன தமது திராட்சைத் தோட்டத்தின் படத்தை தமது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவேற்றி இருக்கிறார்.
இவரைப் போலவே பாதிக்கப்பட்ட திரு ஜேம்ஸ் எட்வர்ட் டில்புரூக், மீண்டும் திராட்சைத் தோட்டத்தை அமைக்க உதவி கோரி காத்திருக்கிறார்.
“எதுவுமே மிஞ்சவில்லை. 48 போத்தல்கள் ஒயின் மட்டுமே மிஞ்சின,” எனது தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் திரு டில்புரூக்.
‘வின்டலோப்பர்’ என்ற ஒயின் தொழிற்சாலையை வைத்துள்ள திரு பௌலி, தமக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$937,870) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.
மூன்றில் ஒரு பங்கு ஒயின் தயாரிப்பை புதர்த் தீ அழித்து விட்டதாக, அதாவது 1,100 ஹெக்டர் பரப்பளவிலான திராட்சைத் தோட்டங்கள் அழிந்துபோய்விட்டதாக ஒயின் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் கூறுகின்றனர். ஒட்டுமொத்தத்தில், 100 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஊடகத் தகவல்கள் கூறின.
அடிலெய்டு மலைப்பகுதியில் தீ இன்னும் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இதுவரை 87 வீடுகளும் வேறு 500 கட்டடங்களும் தீக்கிரையானதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, தெற்கு ஆஸ்தி ரேலிய மாநிலத்தின் தலைநகரான அடிலெய்டில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது.