அங்காரா: லிபியாவுக்கு தனது ராணுவத்தை அனுப்புவது குறித்து துருக்கிய நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் வாக்களிப்பு நடத்தப்படும் என்று துருக்கிய அதிபர் ரெசப் தாயிப் எர்டோவான் தெரிவித்துள்ளார்.
ஐநா ஆதரவளிக்கும் லிபிய அரசாங்கத்துக்கு உதவி புரிய தனது ராணுவத்தை அங்கு அனுப்ப துருக்கி பரிசீலனை செய்து வருகிறது.
“அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடியதும் லிபியாவுக்கு எங்கள் ராணுவத்தை அனுப்புவது குறித்து வாக்களிப்பு நடத்தப்படும். அடுத்த மாதம் 8, 9ஆம் தேதிக்குள் இதுகுறித்து முடிவெடுக்க இலக்கு கொண்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து லிபிய அரசாங்கம் எங்களுக்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் எங்களால் பதிலளிக்க முடியும்,” என்று அதிபர் எர்டோவான் கூறினார்.
லிபியாவின் ஆட்சிப் பீடத்தைப் பிடிக்க கலிஃபா ஹவ்தாரின் லிபிய தேசிய ராணுவம், ஐநா ஆதரவளிக்கும் அரசாங்கத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.
ஐநா ஆதரவளிக்கும் அரசாங்கத்தை துருக்கியும் கத்தாரும் ஆதரிக்கின்றன. ஆனால் ஹவ்தாருக்கு எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவு உள்ளது.
இந்த மூன்று நாடுகளும் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக அதிபர் எர்டோவான் சாடியுள்ளார். முறையான அரசாங்கத்துக்குத் தாம் ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.