ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த 6 மாதங்களாக நீடித்த ஆர்ப்பாட்டங்களின்போது போலிசாருக்கு கிடைத்த பணித்தொகை (அலவன்ஸ்) 135 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$23.44 மில்லியன்) என்று அரசாங்க புள்ளிவிவரத் தகவல் காட்டுகிறது.
ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் போலிசாருக்கு கூடுதல் நேர ஊதியத் தொகையாக 950 மில்லியன் ஹாங்காங் டாலர் வழங்கப்பட்டதாகவும் உணவு மற்றும் பணி தொடர்பான வேலைகளுக்கு அவர்களுக்கு சலுகைத்தொகை வழங்கப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ஹாங்காங் போலிசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க அடிதடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை போலிசார் பயன்படுத்துவதால் அதிருப்தி அடைந்துள்ள பலர் போலிசார் மீது பல புகார்கள் கொடுத்துள்ளனர்.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் போராட்டக்காரர்களிடம் போலிசார் நடந்துகொள்ளும் விதம் தங்களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருப்பதாக பலர் தங்கள் புகார்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் ஹாங்காங்கில் அமைதியை நிலைநாட்ட இத்தகைய கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.