ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புதர்த்தீ மோசமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தீயை அணைக்க போராடி வரும் தொண்டூழியத் தீயணைப்பாளர்களுக்குத் தாம் ஊக்கத் தொகை வழங்கவிருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
புதர்த்தீயை அணைக்க களத்தில் 10 நாட்களுக்கும் அதிகமாக செலவிட்ட தகுதிபெறும் தீயணைப்பாளர்களுக்கு 6,000 ஆஸ்திரேலிய டாலர் (S$5,657) வரையிலான தொகை வழங்கப்படவிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
தொண்டூழியத் தீயணைப்பாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படாது என அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
எனினும், புதர்த்தீயைக் கட்டுப்
படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக நாட்டு மக்கள் குறைகூறி வரும் வேளையில், திரு மோரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் அனல்காற்று வீசி வரும் வேளையில், புதர்த்தீ இன்னும் பல இடங்களுக்குப் பரவும் என்று அஞ்சப்படுவதால் அப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளத்தைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு பல்லாயிரக்கணக்கான சுற்றுப்பயணிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிவழி நேற்று பேசிய விக்டோரியா மாநில அவசரகால நிர்வாக ஆணையர் ஆன்ட்ரூ கிரிஸ்ப், உடனே வேறு இடங்களுக்குச் செல்லுமாறு ஈஸ்ட் கிப்ஸ்லாண்ட் பகுதியில் வசிக்கும் ஏறத்தாழ 30,000 பேரிடம் கேட்டுக்கொண்டார்.
மெல்பர்ன் நகரிலிருந்து அந்தப் பகுதிக்கு கார் பயணம் மூலம் செல்ல கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் எடுக்கும்.
அதிகரித்து வரும் வெப்பநிலை, பலத்த காற்று, மின்னல் வெட்டுஉள்ளிட்ட பல காரணங்களால் புதர்த்தீ மோசமடையும் என அஞ்சப்படுகிறது.