ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி அந்நகரின் வர்த்தகப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று 1,000க்கும் அதிகமானோர் முழக்கங்களை எழுப்பிப் பேரணியாகச் சென்றனர்.
ஒலிபெருக்கி மூலம் பேரணி ஏற்பாட்டாளர்கள் பேசியதைக் கேட்டவாறு இளையர்கள், மூத்தோர் என பல வயதினரும் கறுப்பு நிற முகக்கவசங்களை அணிந்து பேரணியாகச் சென்றனர்.
“பேரணியில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். எத்தனை பேர் அல்லது எத்தனை முறை மக்கள் வெளியே வந்து ஆர்ப்பரித்தாலும் அரசாங்கம் எங்களது கோரிக்கையைப் புறக்கணித்து விடுவது பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும்,” என்றார் சட்டத்துறையில் பணி
புரியும் வோங், 30.
ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்கு குற்ற வழக்கு விசாரணையை எதிர்நோக்க வைக்கும் மசோதா மீட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் ஹாங்காங்கில் ஆறு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
“ஹாங்காங் மக்கள் ஓயப்போவதில்லை. அநியாயம், அநீதி நடப்பதை நாங்கள் காண்கிறோம். எங்களது அடிப்படை நம்பிக்கைக்கு அது முரண்பாடாக விளங்குகிறது,” என்றார் அவர்.
ஆனால், போராட்டங்கள் இப்போது ஜனநாயக ஆதரவு இயக்கமாக உருமாறியுள்ளன. பல்வேறு கடைத்தொகுதிகளிலும் பரபரப்பான சுற்றுலாத் தலங்களிலும் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்
காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
சீன எல்லை அருகே செயல்படும் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் அங்கு ஒன்று
கூடியவர்களைக் கலைக்க மிளகுப் புகையை வீசிய கலவரத் தடுப்பு போலிசார், ஏறக்குறைய 12 ஆர்ப்பாட்டக்காரர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அடுத்த சில நாட்களுக்கு கூடுதலான போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. புத்தாண்டுக்கு முதல் நாளான நாளையும் புத்தாண்டு தினத்தன்றும் நடைபெறும் போராட்டங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பங்குபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் விவகாரங்களில் பெய்ஜிங் தலையிடுவது ஹாங்காங் மக்களைக் கோபமடையச் செய்துள்ளது.
‘ஒரு நாடு, இரு கொள்கைகள்’ எனும் ஆட்சி முறைக்குத் தாம் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறும் சீனா, ஹாங்காங் விவகாரங்களில் தான் தலையிடுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
ஹாங்காங்கில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என நம்புவது சிரமமாகிவிட்டதாக மால்காம் எனும் 20 வயது பல்கலைக்கழக மாணவர் கூறினார்.
“இந்தப் போராட்டத்தில் நாங்கள் வெல்வதற்கான ஒரு வழியும் கிடையாது என்பது பலரின் யதார்த்தமான கருத்து. எனினும், நம்பிக்கையை இழப்பதற்கு இது சரியான தருணம் அல்ல,” என்று சொன்ன அவர், ஹாங்காங்கிற்கு முழு ஜனநாயகம் கிடைக்க தமது போராட்டம் தொடரும் என சூளுரைத்தார்.