கெய்ரோ: எகிப்தில் நேற்று நிகழ்ந்த இரண்டு சாலை விபத்துகளில் குறைந்தது 28 பேர் மாண்டனர். மாண்டவர்களில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் அடங்குவர்.
போர்ட் சயீதுக்கும் எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள டமியேட்டாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கார் மீது மோதியது. விபத்து நிகழ்ந்தபோது அந்தப் பேருந்தில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்கள் பயணம் செய்துகொண்டிருந்ததாக எகிப்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான அல்அராம் நாளிதழ் தெரிவித்தது. இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் மாண்டனர். எட்டு பேர் காயமுற்றனர்.
இந்த விபத்து நிகழ்வதற்கு முன்பு தலைநகர் கெய்ரோவின் கிழக்குப் பகுதியில் இன்னொரு விபத்து நிகழ்ந்தது. சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மூன்று எகிப்தியர்கள், மலேசியாவைச் சேர்ந்த இரு பெண்கள், இந்திய ஆடவர் ஒருவர் உட்பட பேருந்து ஓட்டுநர், சுற்றுப்பயண வழிகாட்டி, பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்ததாக எகிப்திய மருத்துவமனை தெரிவித்தது.
குறைந்தது 24 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலர் சுற்றுப்பயணிகள் என்றும் மருத்துவமனை கூறியது. ஆனால் அவர்களது நிலை குறித்து அது விளக்கமளிக்கவில்லை.
கடந்த ஆண்டு எகிப்தில் 8,480 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் 11,098 சாலை விபத்துகள் நிகழ்ந்தன.