டாக்கா: பங்களாதேஷைக் கடுங்குளிர் வாட்டிவரும் நிலையில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்ளாதேஷின் வடக்குப் பகுதியில் உள்ள டெட்டுலியா நகரில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே இவ்வாண்டு அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆகக் குறைவான வெப்பநிலையாகும்.
குளிரால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பங்ளாதேஷ் சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரியான திருவாட்டி ஆயிஷா அக்தர் தெரிவித்தார்.
குழந்தைகள், முதியோர் பலருக்கு நிமோனியா ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுவோர், ஏழைத் தொழிலாளர்கள், வீடு இல்லாதோர் ஆகியோர் இந்தக் கடுங்குளிரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குத் தகுந்த ஆடைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களுக்கு இந்தக் கடுங்குளிர் வானிலை தொடரும் என்றும் அத்துடன் சேர்ந்து குளிர் காற்று வீசும் என்றும் அடர்ந்த பனிப்பொழிவு ஏற்படும் என்றும் பங்ளாதேஷ் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அடர்ந்த பனியின் காரணமாக விமானங்கள் வேறு இடங்களில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் பல விமானச் சேவைகள் தாமதமடைந்ததாகவும் பங்ளாதேஷ் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.