நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள யூத சமய போதகர் ஒருவரின் வீட்டில் ஐந்து பேரைக் கத்தியால் குத்திவிட்டு தாக்குதல்காரர் தப்பிச் சென்றதாக அமெரிக்காவில் உள்ள யூத சமய அமைப்பு தெரிவித்தது.
நியூயார்க் நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள அந்த யூத சமய போதகரின் வீட்டிற்குள் அந்தத் தாக்குதல்காரர்கள் நுழைந்ததாக யூதர்கள் விவகார மன்றம் தெரிவித்தது.
தாக்குதல்காரர் தமது முகத்தை துணி வைத்து மறைத்திருந்ததாகவும் அது கூறியது. காயமடைந்த ஐவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் ஒருவர் குறைந்தது ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து நியூயார்க் நகரின் தலைமைச் சட்ட அதிகாரி கவலை தெரிவித்தார்.
“குறிப்பிட்ட இனம், சமயம் மீது வெறுப்பு கொண்டு நிகழ்த்தப்படும் தாக்குதல்களை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம். இந்தப் பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துவோம்,” என்றார் அவர்.
இந்தத் தாக்குதலை அடுத்து நியூயார்க்கில் யூதர்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.