ரியாத்: பொது இடங்களில் ஏற்கத்தகாத முறையில் ஆடை அணிந்ததற்காக இம்மாதம் 200க்கும் அதிகமானோரை சவூதி அரேபிய போலிஸ் கைது செய்தது.
நாட்டின் பொருளியல் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்காமல் மற்ற வழிகளிலும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெருக்க, சமூக கட்டுப்பாடுகளை சவூதி அரசு தளர்த்தி வரும் வேளையில் இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஏற்கத்தகாத முறையில் ஆடை அணிந்ததற்காக கடந்த வாரம் ஏறக்குறைய 120 ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்ததன் பேரில் 88 பேர் கைது செய்யப்பட்டதாக வேறோர் அறிக்கையில் போலிஸ் கூறியது. சவூதி தலைநகர் ரியாத்தில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரி ஒன்றில் தங்களுக்குத் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பெண்கள் பலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த இந்த இசைக் கச்சேரி, சவூதியில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய கச்சேரி என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக சவூதி அரேபியா செப்டம்பரில் முதல்முறையாக அறிவித்திருந்தது. எனினும், பொது இடங்களில் ஏற்கத்தகாத முறையில் ஆடை அணிவது, முத்தம் கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்தால் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது.
ஆண்களும் பெண்களும் இறுக்கமான ஆடைகளை அல்லது தகாத வார்த்தைகள், படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றுப்பயணத்துறை ஆணையத்தின் இணையப் பக்கத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

