ஒயிட் செட்டில்மென்ட், டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், ஃபோர்ட் வொர்த் பகுதிக்கு வடமேற்கில் உள்ள ஒயிட் செட்டில்மென்ட் தேவாலயத்துக்குள் நேற்று முன்தினம் திடீரென நுழைந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தேவாலயத்தில் இருந்தவர்களில் கைத்துப்பாக்கி ஏந்திய ஒரு சிலர் அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும் டெக்சஸ் போலிஸ் தெரிவித்துள்ளது.
அந்த சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக அவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலிஸ் கூறியது.
இதில் காயமடைந்த மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிக்காரனின் வெறித்தனத்தைக் கட்டுப்படுத்த தேவாலயத்தில் இருந்தவர்கள் ஒரு சிலரின் துணிகரச் செயலால் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிந்ததாக ஒயிட் செட்டில்மென்ட் போலிஸ் பிரிவுத் தலைவர் ஜே.பி. பெவரிங் தெரிவித்தார்.
“ஏராளமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அமெரிக்கா பார்த்துவிட்டது. “எனினும், பண்டிகை காலத்தில் இது நிகழ்வது வேதனை தருகிறது,” என்று அவர் கூறினார்.