சோல்: வடகொரியாவின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிபடுத்திக்கொள்ள பதில் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
ஆளும் பாட்டாளிக் கட்சியின் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக உரையாற்றிய கிம், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்குத் தூதரக, ராணுவ பதில் நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்திச் சொல்லியிருந்தார்.
வடகொரியாவின் பொருளியலை மேம்படுத்துவது குறித்து தேசிய அளவிலான இலக்குகளை அவர் சுட்டியதுடன் இதையும் தெரிவித்தார். கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டம், நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
மேலும் தம் புத்தாண்டு உரையின்போது கிம் பொருளியல், பாதுகாப்புக் கொள்கைகள் குறித்துப் பெரும் மாற்றங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத் தடை நீக்கம், அணுவாயுதக் களைவு ஆகியவற்றின் தொடர்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அமெரிக்கா, வடகொரியா இடையிலான அணுவாயுத பேச்சுவார்த்தை ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தை இனியும் தொடரப் போவதில்லை என்று கிம் தம் உரையில் அறிவிப்பார் என்று சிலர் நம்புகின்றனர்.
அணுவாயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தாமல் தமக்கே தற்காலிகமாக தடைவிதித்துள்ள கிம், அத்தடையை நீக்கி நேரடி மோதலுக்குத் தயாராவார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இதற்கிடையே கட்சிக் கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டனவா என்பது குறித்து ‘கேசிஎன்ஏ’ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அமெரிக்காவைக் குறிப்பிடும் கருத்து எதையும் கிம் சொன்னதாகவும் தெரியப்படுத்தப்படவில்லை.
அமெரிக்கா தொடர்ந்து வடகொரியா மீது வர்த்தகத் தடைகளை விதித்து அழுத்தம் தந்துவந்தால், வடகொரியா ஒரு புதிய உத்தியைக் கையாளும் என்று இதற்குமுன், தம் 2019ஆம் புத்தாண்டு உரையில் கிம் குறிப்பிட்டிருந்தார்.