பாக்தாத்: ஈரானிய ஆதரவு பெற்ற போராளிக் குழு மீது ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்காவால் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக ஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கொடுமையானவை என்றும் இதனால் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்றும் ஈராக்கிய பிரதமர் கூறியதாக பிரதமர் அலுவலகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
அமெரிக்காவின் செயல் ஈராக்கின் இறையாண்மையைக் கடுமையாக மீறியுள்ளதாகவும் திரு மஹ்டி தெரிவித்தார்.
இதையடுத்து ஈராக் தன் இறையாண்மையைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவு, நாட்டு பாதுகாப்பு, அரசியல் மற்றும் சட்டக் கட்டமைப்பு அனைத்தையும் மறுஆய்வு செய்ய உள்ளதாக ஈராக் அரசாங்கம் கூறியது.
‘கட்டேப் ஹிஸ்புல்லா’ போராளிக் குழுவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ஈராக்கின் மூன்று இடங்களிலும் சிரியாவின் இரு இடங்களிலும் தாக்குதல் மேற்கொண்டது. முன்னதாக ஈராக்கிய ராணுவத் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கான பதில் நடவடிக்கையே இத்தாக்குதல்கள் என்று கூறப்பட்டது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 55 பேர் காயமடைந்ததாகவும் ஈராக் கூறியுள்ளது.
ஈராக்குக்கு இரு முக்கிய நட்பு நாடுகள் ஈரான் மற்றும் அமெரிக்கா. ஆனால் 2015ஆம் ஆண்டு அணுவாயுத ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விலகியதுடன் மீண்டும் வர்த்தகத் தடைகளை விதித்ததிலிருந்து இவை இரண்டுக்கும் இடையே உள்ள உறவு பாதிப்படைந்துள்ளது.
‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்காவும் ஈராக்கும் இணைந்து பல ஆண்டுகளாக போரிட்டு வந்துள்ளன. இந்நிலையில், ஈராக்கின் மற்றொரு நட்பு நாடான ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.