ஹாங்காங்: ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் ஹாங்காங் போராட்டக் களத்தில் நேற்று வித்தியாசமாக குழந்தைகளுடன் குடும்பங்கள் காணப்பட்டன. பல்லாயிரக்கணக்கில் திரண்ட அவர்கள் ஜனநாயக ஆதரவு முழக்க வரிகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
வான்சாய் மாவட்டத்தில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த பேரணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகையை பாய்ச்சினர்.
ஆயினும் அங்கிருந்து செல்ல மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்களில் முன்வரிசையில் இருந்தவர்கள் மற்றவர்களை வளையம்போல் சுற்றி நின்று தற்காத்தனர்.
மேலும் சிலர் போலிசின் கண்ணீர்ப் புகை வீச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
முழுமையான ஜனநாயகம் வேண்டியும் போலிசின் அடக்குமுறைகளுக்கு எவ்வித கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திர விசாரணை வேண்டியும் ஆர்ப்பாட்டங்கள் புத்தாண்டிலும் தொடர்ந்துள்ளன.
நேற்று நடைபெற்ற பேரணி, நவம்பரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகத் தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்கள் பெருவாரியாக வென்ற பின்னர் நடைபெற்றிருக்கும் இரண்டாவது பெரியது என்று போலிசார் தெரிவித்தனர். மக்கள் மனித உரிமை முன்னணி என்னும் அமைப்பு இந்தப் பேரணியை ஏற்று நடத்தியது.
பிற்பகல் 3 மணிக்கு சற்றுமுன்னதாகத் தொடங்கிய பேரணி 3.2 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையில் சென்றதாக போலிசார் கூறினர். விக்டோரியா பார்க், மத்திய வர்த்தக வட்டாரம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்களை உள்ளடக்கிய பாதைகளைக் கடந்து பல்லாயிரம் பேர் அணிவகுத்துச் சென்றனர். விநோதமான முகக் கவசத்தை பேரணியில் சென்ற பலரும் அணிந்திருந்தனர்.