ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப்பட்டதன் பின்னணியில் ஈரான் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதற்காக அந்நாடு ‘பெரிய விலை’ கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், ஈரானுடன் போர் மூளும் வாய்ப்பு இருப்பதாகக் கருதவில்லை என்றும் தான் அமைதியை விரும்புகிறேன் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஈராக்கில் இயங்குவதாகச் சொல்லப்படும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்; கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.
அந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த ஈரான், அதை அமெரிக்காவின் பயங்கரவாதச் செயல் என்றும் விமர்சித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாக்தாத்தில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
கடும் பாதுகாப்புடன் ‘பசுமை மண்டலப்’ பகுதிக்குள் தூதரகம் அமைந்திருந்தபோதும் ஈராக்கிய பாதுகாப்புப் படையினர், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதித்துவிட்டதாக பிபிசி செய்தி கூறுகிறது.
ஏணி மூலம் சுவரேறிக் குதித்து, அமெரிக்கத் தூதரகத்தினுள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முகப்பில் இருந்த கட்டடத்தின் சன்னல்களை நொறுக்கியதையும் தீவைத்ததையும் படங்கள் காட்டின.
இருப்பினும், தூதரக அதிகாரிகள் எவரும் வெளியேற்றப்படவில்லை என்றும் அவர்கள் உள்ளேயே பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின் ஈராக்கியப் படையினரும் கலவரத் தடுப்புப் படையினரும் அங்கு அனுப்பப்பட, இரவானதும் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, கூடுதலாக 750 ராணுவ வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.