தைப்பே: தைவானின் ராணுவத் தலைவர் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. அங்கு இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் மாண்ட ஷென் இ-மிங் தைவான் தற்காப்பு அமைச்சின் முக்கிய எட்டு தலைவர்களில் ஒருவர். ராணுவத்தின் பிளேக் ஹாக் ஹெலிகாப்டரில் மூன்று மேஜர் ஜெனரல் அதிகாரிகளுடன் திரு ஷென் சென்ற ஹெலிகாப்டர், தைப்பேயின் அருகேயுள்ள ஒரு மலை மீது மோதி நொறுங்கியது.
தைவானின் வடகிழக்கு இலான் பகுதியில் உள்ள முகாம் ஒன்றுக்கு தற்காப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள் வருகை புரிவது வழக்கம். அவ்வாறான வருகையின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த எட்டு பேரில் ஐவர் உயிர்பிழைத்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.