ஈராக் தலைநகர் பாக்தாத்தின் அனைத்துலக விமான நிலையம் மீது அமெரிக்காவின் ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற புரட்சிப் படைத் தலைவர் காசிம் சுலைமானியும் ஈரான் துணை ராணுவப் படையின் தளபதி அபு மாஹ்தி அல்-முஹண் டிஸ் உள்ளிட்டவர்களும் கொல்லப்பட்டனர்.
அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்க அமெரிக்க ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாகவும் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்கப் படை வீரர்களைப் பாதுகாப்பதற்காக இந்த தற்காப்பு நடவடிக்கை தேவைப்பட்டது என்றும் அமெரிக்க தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டது.
ஈராக்கிலும் அந்த வட்டாரம் முழுவதிலும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளையும் படை வீரர்களையும் தாக்க ஜெனரல் சுலைமானி தீவிரமாக திட்டங்களை வகுத்து வந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தாக்குதல் குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் கருத்து எதையும் வெளியிடவில்லை என்றபோதிலும் உடனடியாக அமெரிக்கக் கொடியை தமது டுவிட்டரில் அவர் பறக்கவிட்டார்.
ஜெனரல் சுலைமானியைக் கொல்ல அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெரும்பிழையை அமெரிக்கா செய்துள்ளதாக ஈரான் அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
அதே நேரம் சுலைமானி கொல்லப்பட்டதை ஈராக்கியர்கள் வீதிகளில் நடனமாடி கொண்டாடுவதாக தமது டுவிட்டரில் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அது தொடர்பான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.