ஈரான் தனது புரட்சிப் படைத்தள பதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கடுமையான பாடம் கற்பிக்க முடிவெடுத்தால் மத்திய கிழக்கில் உள்ள ஆயுதம் தாங்கிய போராளிக்குழுக்களை அது துணைக்கு அழைத்துக்கொள்ளக்கூடும் என்று செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் தாக்குதல் எல்லைக்கு அருகில் இருக்கக்கூடிய போராளிக் குழுக்கள் அவை என்றும் கொல்லப்பட்ட காசிம் சுலைமானி கடந்த இருபதாண்டு காலமாக இதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானிடம் இருந்து ஆயுதங்களையும் பயிற்சிகளையும் பெற்று வரும் ஆயிரக்கணக்கான போராளிகள் ஈராக், சிரியா, லெபனான், ஏமன் பகுதிகளில் குழுக்களாக இயங்கி வருகின்றன. இப்போராளிகளின் பேரன்புக்குரியவராக சுலைமானி திகழ்ந்து வந்தார்.
ஈராக் போர்ப்படை, இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா, ஏமனின் ஹுதி, காஸா தீவிரவாதக் குழு போன்றவற்றை தனது வட்டாரத்தில் எதிரிகளைச் சமாளிக்க இதற்கு முன்னரும் ஈரான் பயன்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட சுலைமானியை அனைத்துலக தடுப்பு அரண் என்று வர்ணித்த ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்காவுக்குக் கடுமையான பதிலடி காத்திருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.
இதற்கிடையே, சுலைமானியும் ஈராக் துணை ராணுவத் தளபதியும் கொல்லப்பட்ட விவகாரம் ஈராக்கிற்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டைக்கு தமது பகுதி போர்க்களமாகப் பயன்படுத்தப்படுவதாக ஏராளமான ஈராக்கியர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய தாக்குதல் வம்புக்கு இழுக்கும் செயல் என்று கூறிய ஈராக்கின் காபந்து பிரதமர் அதேல் அப்தேல் மாஹ்தி, ஈராக்கில் பேரழிவுப் போருக்கு இது வழிவகுக்கும் என்றார்.
திரு டிரம்ப்பின் ஆகாயப் படை தாக்குதல் முடிவை அமெரிக்க எதிர்த்தரப்பினர் விமர்சித்தபோதிலும் அவரது சொந்தக் கட்சியினரும் ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியது சரியான நடவடிக்கை என்றனர்.
கொல்லப்பட்ட சுலைமானி ஈரான் ராணுவ புரட்சிப் படையின் தலைவராக இருந்தார். அதனால் அவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்று அழைக்கப்பட்டார். மத்திய கிழக்கில் ஈரானிய நடவடிக்கை
களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் இவர்.
அமெரிக்க ஆகாயப்படை தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 விழுக்காடு உயர்ந்தது. வர்த்தகத் தொடக்கத்தில் 63.84 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை திடுதிப்பென்று 69.16 டாலராக உயர்ந்தது. மத்திய கிழக்கில் பெரும் மோதல் உருவாகும் என முதலீட்டாளர்கள் அச்சமடைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சொல்லப்பட்டது.