சிட்னி: கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவை வாட்டி வரும் காட்டுத்தீயால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிட்டத்தட்ட அரை பில்லியன் விலங்குகள் மடிந்துபோயிருக்கலாம் என்றும் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என 480 மில்லியன் விலங்குகள் தீயில் சிக்கியும் அல்லது வாழிடங்களைப் பறிகொடுத்தும் அழிந்து போயிருக்கக்கூடும் என சிட்னி பல்கலைக்கழகத்தின் திரு கிறிஸ் டிக்மன் தலைமையிலான ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
“தீயால் வனப்பகுதி முற்றிலும் அழிந்துபோன நிலையில் உணவு, உறைவிடமின்றி விலங்குகள் தவித்திருக்கும். அத்துடன், ஓநாய்கள், காட்டுப்பூனைகள் போன்ற கொன்றுண்ணிகள் உணவுக்காக மற்ற விலங்குகளை வேட்டையாடுவதாலும் எண்ணற்ற விலங்குகள் மடிந்திருக்கும்,” என்றார் திரு டிக்மன்.
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏராளமான காடுகளும் புதர்களும் வீடுகளும் காட்டுத்தீக்கு இரையான நிலையில், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் காயமடைந்த அல்லது உயிரிழந்த கங்காரு, கோலா கரடிகள் போன்ற விலங்குகளின் படங்கள் பெரும் துயரத்தை அளிப்பதாக உள்ளன.
குறிப்பாக, கோலா கரடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே. நியூ சவுத் வேல்சின் மத்திய வட கரையோரப் பகுதியில் மட்டும் கோலா கரடிகள் கிட்டத்தட்ட 30% அழிந்துபோயிருக்கலாம் என அஞ்சுவதாகக் குறிப்பிட்டார்.
ஐந்து மில்லியன் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பு காட்டுத்தீயால் அழிந்துபோன நிலையில், அதன்பிடியில் சிக்கி இதுவரை 20 பேர் மரணமடைந்துவிட்டனர். இன்னும் பலரைக் காணவில்லை.
ஆயிரம் பேரை மீட்ட ராணுவம்
இதனிடையே, காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட மல்லக்கூட்டா நகரில் சிக்கியிருந்தவர்களை கடல் வழியாக ராணுவத்தினர் மீட்டனர்.
“நேற்றுப் பிற்பகல் வரை, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அந்த நகரில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்,” என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
வெப்பநிலை இன்று 40 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் நெருக்கம் மிகுந்த தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.