நியூயார்க்: சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துப் பேசினால் வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அமேசான் நிறுவனம் மிரட்டுவதாக ஊழியர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர்.
‘பருவநிலை நீதிக்கான அமேசான் ஊழியர்கள்’ என்ற குழுவை அமைத்து சுற்றுச்சூழலைக் காப்பதற்காகக் குரல் கொடுத்து வரும் தாங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறிவிட்டதாக ‘அமேசான்’ கூறுகிறது என்று அந்த ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு அதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுத்ததாகவும் அதன்பிறகே தங்களுக்குப் பணிநீக்க மிரட்டல் வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியீடு அறவே இல்லாத நிறுவனமாக அமேசான் மாறவேண்டும்; நிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற படிம எரிபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதைக் குறைக்கவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.