வாஷிங்டன்: ஈரானிய புரட்சி படைத் தளபதியை கொன்றதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது படைபலத்தைப் பறைசாற்றும் வகையில் மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 3,500 ராணுவத் துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை
யடுத்து பதற்றம் அதிகரித்ததால், இந்த வார தொடக்கத்தில் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான துருப்புக்களை இப்பகுதிக்கு அனுப்பிய 82வது அனைத்துலக ஆகாயவழிப் படையிலிருந்து கூடுதல் துருப்புகள் அனுப்பப்படும்.
பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மத்திய கிழக்கு பகுதிக்கு துருப்புகள் அனுப்பப்படலாம் என்ற செய்தி இந்த வார தொடக்கத்திலேயே 82வது அனைத்துலக ஆகாயவழிப் படைபிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சொன்னார்.
“வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் பொருத்தமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த படைப்பிரிவு ஈரான், குவைத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
கடந்த சில மாதங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரானிய புரட்சி படைத் தளபதியான காசிம் சுலைமானி இருப்பதாக கூறி வந்த அமெரிக்கா, நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் அத்தளபதி உட்பட ஏழு பேரைக் கொன்றதைத் தொடர்ந்து இருபுறமும் பதற்றம் அதிகரித்துள்ளது.
எனவே ஈராக்கில் உள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டு
உள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்கள் குடிமக்கள் ஈரான், ஈராக் நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும் உலகப் பங்கு சந்தைகள் சரிவு கண்டதோடு மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியது.