பாரிஸ்: பூங்கா ஒன்றில் ஒருவர் கத்தியால் நடத்திய தாக்குதலில் ஒருவர் மாண்டதையடுத்து, மர்ம நபரை பிரான்ஸ் போலிசார் சுட்டுக்கொன்றனர்.
பாரிஸில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நகர பூங்கா ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்தனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் கூரான கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைப் பற்றி அறிந்தவுடன் விரைந்து சென்ற போலிசார் அந்நபரைச் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், போலிசாரின் அறிவுறுத்தலைச் செவிமடுக்காத அந்நபர், தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்பட்டதால், போலிசார் அவனைத் துப்பாக்கியால் சுட்டனர்.
குர்ஆன் உள்ளிட்ட சமயம் சார்ந்த ஆவணங்கள் அந்த ஆடவரின் உடைமைகளில் காணப்பட்டது என்றாலும் தீவிர இஸ்லாமியர்களால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசாங்க தரப்பு பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்நபர் சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.