ஆஸ்திரேலியாவில் இடைவிடாது காடுகளும் புதர்களும் தீப்பற்றி எரிந்துவருவது, அண்டை நாடான நியூசிலாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத்தீயால் எழுந்த புகை நியூசிலாந்து வரை சென்றதால் அந்நாட்டின் பல பகுதிகளில் நேற்று வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆக்லாந்து நகரவாசிகள், என்னமோ ஏதோ எனப் பதறி அடித்து, அவசரகால அழைப்பு எண்ணைத் தொடர்புகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக நியூசிலாந்தின் தென்பகுதியைச் சூழ்ந்திருந்த புகை, இப்போது வட பகுதிக்கு நகர்ந்துள்ளது.
வழக்கமாக அழகிய வெண்ணிற பனிப்பாறைகள் போலக் காட்சி தரும் வானம், ஆரஞ்சு நிறத்திற்கு மாறியதால் அச்சமடைந்த மக்கள், அவசர எண்ணை அழைக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், வானம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றுவதற்கு ஆஸ்திரேலிய காட்டுத்தீயே காரணம் என்றும் இதுபற்றி தகவல் அளிப்பதற்காக அல்லது தகவல் அறிவதற்காக வேண்டி ‘111’ என்ற அவசர எண்ணை மக்கள் அழைக்க வேண்டாம் என்றும் போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
“ஆரஞ்சு வானம் தொடர்பாக எங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன,” என்று போலிஸ் தெரிவித்தது.
நீல ஒளி மங்கலாகத் தெரியும் வகையில் புகை அதனை மறைப்பதுவே வானம் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கக் காரணம் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு நிற வானம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஏராளமான படங்களையும் காணொளிகளையும் இணையவாசிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். “வானம் விநோதமாகவும் அதே சமயத்தில் பயங்கரமாகவும் காணப்படுகிறது,” என்று சமூக ஊடகவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டைச் சூழ்ந்துள்ள புகையால் மனிதர்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது என்று நியூசிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், காற்று மாசுப் பிரச்சினை குறைவாக இருந்தாலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், ஆஸ்துமா அல்லது மற்ற மூச்சுப் பிரச்சினை இருப்பவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சு கூறியிருக்கிறது.
இந்நிலையில், தெற்கிலிருந்து காற்று வீசுவதால் நாளைக்குள் வானம் தெளிவடைந்துவிடும் என எதிர்பார்ப்பதாக ‘வெதர்வாட்ச்’ அமைப்பு தெரிவித்துள்ளது.