அமெரிக்கத் தளங்களின் அல்லது அமெரிக்கர்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் மிக விரைவாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து, ஈரானிய புரட்சிப் படைத் தலைவரான காசிம் சுலைமானியை அண்மையில் அமெரிக்கா ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதையடுத்து, அமெரிக்காவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று ஈரான் சூளுரைத்தது.
இந்நிலையில், அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்துள்ளோம் என்று ஈரான் துணிச்சலாகக் கூறி வருவதாகச் சொன்ன டிரம்ப், ஈரானுக்கும் அதன் கலாசாரத்திற்கும் நெருக்கமான 52 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் ஈரான் தாக்கும் பட்சத்தில் அவற்றின் மீது விரைவாகவும் அதே சமயத்தில் கடுமையாகவும் தாக்குதல் மேற்கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எந்த மிரட்டல்களும் விடுக்கப்படக்கூடாது என அமெரிக்கா விரும்புகிறது என்றும் அவர் சொன்னார்.
1979ஆம் ஆண்டில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து 52 அமெரிக்கர்கள் பிணை பிடிக்கப்பட்டனர். அதை நினைவுகூரும் விதமாகவே இப்போது ஈரானின் 52 இடங்களுக்குக் குறிவைத்துள்ளதாக டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி டுவிட்டரில் ஈரானை எச்சரித்து டிரம்ப் பல கருத்துகளைப் பதிவிட்ட சற்று நேரத்திற்குள் அமெரிக்கக் கூட்டரசு களஞ்சிய நூலகத் திட்டத்தின் இணையத்தளத்தை ‘ஈரான் இணையப் பாதுகாப்புக் குழு ஊடுருவிகள்’ முடக்கினர்.
“ஈரான் இஸ்லாமியக் குடியரசின் செய்தி இது. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன, ஏமன், சிரிய மக்கள் உள்ளிட்ட எங்களின் வட்டார நண்பர்களுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தமாட்டோம்,” என்ற வாசகம் அந்த இணையப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
அத்துடன், வாயில் ரத்தம் வழிந்தபடி முகத்தில் காயத்துடன் கூடிய டிரம்ப்பின் படமும் அதில் காணப்பட்டது.
இதனிடையே, கொல்லப்பட்ட காசிம் சுலைமானின் உடல் பாக்தாத்தில் இருந்து நேற்று ஈரானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைப் பெற்று, அஞ்சலி செலுத்துவதற்காக ஈரானின் ஆவாஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று திரண்டனர்.
தங்களது மார்பில் அடித்தபடி, ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என அவர்கள் முழக்கமிட்டனர்.
சுலைமானியுடன் கொல்லப்பட்ட மேலும் ஐந்து ஈரானியர்களின் உடலும் நேற்று சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சுலைமானியின் மரணத்தை அடுத்து மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதைத் தணிக்கும்விதமாக, சுலைமானி மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தன்னுடன் ஆலோசிக்கவில்லை என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும், சவூதி பட்டத்து இளவரசர், ஈராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்டியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பதற்றத்தைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.