சிட்னி: ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மூன்று மாநிலங்களில் காட்டுத் தீ மோசம் அடைந்துள்ள வேளையில் தீயைக் கட்டுப்படுத்த பிரதமர் விரை வாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு நிலவுகிறது.
அத்துடன் ஊரே பற்றி எரியும்போது திரு மோரிசன் தன் குடும்பத்துடன் ஹவாயி தீவுக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருந்ததையும் ஆஸ்திரேலிய மக்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது குறைகூறுவதற்கு இது நேரமல்ல என்று கூறினார்.
“என் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த நேரத்தில் குறை கூறுவதால் யாருக்கும் எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. ஆகவே குறை கூறுவதைத் தவிர்த்து தீயைக் கட்டுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதற்கான நேரம் இது,” என்று திரு மோரிசன் கூறினார்.
தீயை அணைக்க ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல் முறையாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 3,000 போர்க்காலப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாகவும் திரு மோரிசன் கூறினார்.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த ராணுவ ஆதரவு வழங்க சிங்கப்பூரும் பாப்புவா நியூ கினியும் முன்வந்திருப்பதாகவும் திரு மோரிசன் குறிப்பிட்டார். நியூசிலாந்து கூடுதலாக மூன்று விமானப் படை ஹெலிகாப்டர் களையும் சிப்பந்திகளையும் அனுப்பியுள்ளதாகவும் அவர் சொன்னார். இருப்பினும் திரு மோரிசன் தாமதமாக இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பலர் குறை கூறி வருகின்றனர். நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, சவுத் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் பல மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீயில் நாசமான பிறகு அவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பலர் புகார் கூறியுள்ளனர்.
தீயணைப்புப் பணிகளில் போர்க்காலப் படை வீரர்கள் அமர்த்தப்பட்டிருப்பது ஊடகங்களில் வெளியான செய்தியைப் பார்த்த பின்னரே தங்களுக்குக் தெரியவந்ததாக தீயணைப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
போர்க்கால படை வீரர்கள் தீ அணைப்புப் பணியில் அமர்த்தப் பட்டது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றை திரு மோரிசன் தற்காத்துப் பேசியுள்ளார்.
தீயை அணைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுத்துரைக்கவே அத்தகைய வீடியோ வெளியானதாகவும் பிரதமர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே வெப்பம் சற்று தணிந்திருப்பதும் காற்றின் வேகம் குறைந்திருப்பதும் தீயணைப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இரவு பகலாக போராடி வரும் தீஅணைப்பாளர்களுக்கு தற்போதைய பருவநிலை சற்று நிம்மதியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களி்ல் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. பாதுகாப்பு கருதி சிட்னி புறநகர் பகுதி களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சில பகுதிகளில் பெரும் சேதம் ஏற்படும் என்று அஞ்சப் படுகிறது. நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 150 இடங்களில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் காட்டுத் தீ பரவியது முதல் இதுவரை தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 2,000 வீடுகள் தீயில் நாசமாகின. காட்டுத் தீ காரணமாக ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.