பெய்ஜிங்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் வேளையில் அமெரிக்கா அதன் படைபலத்தை பயன்படுத்தக்கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற புரட்சிப் படைத் தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவப் படை கொன்றது முதல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை அனைத்துலக விதிமுறைகளை மீறிய செயல் என்று திரு வாங் குறிப்பிட்டார். ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா அதன் படைபலத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து சென்ற வாரம் இந்திய கடல் பகுதியில் கூட்டாக கடற்படை பயற்சியை மேற்கொண்டன. இதற்கிடையே அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.