ஈடன்: ஆஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீயைக் கையாள ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்களுக்கு உதவ வேண்டும் என்ற உலகளாவிய வேண்டுகோளைத் தொடர்ந்து நிதியாக 25 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய டாலர் (23.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) திரட்டப்பட்டுள்ளது.
வார இறுதியில் நாட்டின் கொடிய காட்டுத்தீயின் நெருக்கடி சில மோசமான நிகழ்வுகளை விட்டுச் சென்றது.
கிழக்கு கடற்கரை நகரங்கள் இருளில் மூழ்கின, கிராமப்புறங்களில் சாம்பல் மழை பெய்தது, முக்கிய நகரங்கள் புகையால் சூழப்பட்டிருந்தன.
மேலும் நூற்றுக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டதோடு, காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது, இதில் கடந்த சனிக்கிழமை நண்பரின் வீட்டைக் காப்பாற்ற முயன்ற ஒருவர் மாண்டதும் அடங்கும்.
இந்நிலையில், இந்தக் காட்டுத்தீயைக் கையாளும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலர் நிதிதிரட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் செலஸ்டே பார்பர் தனது சமூக ஊடக புகழைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்களுக்கான பேஸ்புக் நிதி திரட்டலைத் தொடங்கினார்.
அது 25 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் என்ற இலக்கை மூன்று நாட்களில் தாண்டிவிட்டது.
ஆஸ்திரேலிய நடிகை நிகோல் கிட்மேனின் நிதி திரட்டு முயற்சிக்கு அமெரிக்க பாப் பாடகியான பிங் 500,000 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்குவதாக கூறியுள்ளார்.
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஆஷ்லே பார்ட்டி, இந்த வாரம் நடைபெறும் பிரிஸ்பேன் அனைத்துலக போட்டியிலிருந்து கிடைக்கும் மொத்த தொகையையும் செஞ்சிலுவை இயக்கத்திற்கு நன்கொடையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த தொகை கிட்டதட்ட 250,000 அமெரிக்க டாலராக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இரண்டாவது நாளாக லேசாக பெய்த மழை தீயணைப்பு வீரர்களுக்கு நிம்மதி அளித்தது.
என்றாலும் இவ்வாரத்தின் பிற்பகுதியில் மீண்டும் வெப்ப காற்று வீசு வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.