நைரோபி: கென்யாவிலுள்ள அமெரிக்க கூட்டு ராணுவ படைத் தளத்தின் மீது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் பயங்கரவாதக் குழு நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாகக் சிஎன்என் செய்தி கூறுகிறது.
கடலோரப் பகுதியான லாமுவில் உள்ள மாண்டா விமான தளத்தின் மீது உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏழு விமானங்களும் மூன்று ராணுவ வாகனங்களும் வான் வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக பயங்கரவாத அமைப்பு கூறுவதாக இன்னோர் செய்தி தெரிவிக்கிறது.
எனினும், இத்தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்க, கென்ய ராணுவத்தினரின் பதிலடியில் 4 பயங்கரவாதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கென்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் பால் ஜுகுனா தெரிவித்து
உள்ளார்.
இந்தத் தாக்குதலில் இரு நாட்டு இராணுவ வீரர்கள் தரப்பில் எவரும் உயிரிழந்தார்களா என்பது தொடர்பாக உடனடித் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை கென்ய போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சோமாலியாவுக்கு கென்யா படைகளை அனுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்-ஷாபாப் பயங்கரவாதக் குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.