சாவ் பாலோ: ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் வெளியாகும் கறும்புகை பிரேசில் நாட்டின் தெற்குப்பகுதியை எட்டியுள்ளதாக அந்நாட்டின் தேசிய விண்வெளி ஆய்வுக்கழகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் கிடைக்கப்பெற்ற படங்களை மேற்கோள் காட்டி அந்நிலையத்தின் தொலை உணர்வு ஆய்வுப்பிரிவு கூறியது. ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் புகைமூட்டம் பிரேசிலின் தென்பகுதியில் உள்ள போர்ட்டோ அலெக்ரே பகுதியை எட்டியுள்ளது என்று மெல்சுல் என்னும் தனியார் ஆய்வு நிலையம் ஒன்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்தப் புகைமூட்டம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் மேகக்கூட்டங்களுடன் சேர்ந்துள்ளது என்றும் அந்த நிலையம் தெரிவித்தது. இருப்பினும் செயற்கைக்கோள் உதவியுடன் கிடைக்கப்பெற்ற படங்களை வைத்துப் பார்க்கும்போது போர்ட்டோ அலெக்ரே நகருக்கு மேல் புகை சூழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது என்றும் அது தெரிவித்தது.
அதே போல் சிலி மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலும் புகைமூட்டத்தைக் காணமுடிவதாக சிலியின் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் மேல் ஆகாயத்தில் 6,000 மீட்டர் உயரத்தில் சூழ்ந்திருக்கும் புகைமூட்டம் தென்னமெரிக்காவை வந்தடைய 12,000 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது எனவும் அந்நிலையம் தெரிவித்தது. இருப்பினும் இந்த புகைமூட்டம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கு பெரிய அளவில் கேடுவிளைவிக்கமாட்டா என சிலி வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

