பாக்தாத்: ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ஆதரவுப் படை முகாம்களைக் குறி வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது.
அந்த ஏவுகணைகளில் இரண்டு பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், அரசாங்கக் கட்டடங்கள், குடியிருப்புகள் ஆகியவை உள்ள பாதுகாப்பான வட்டாரத்தில் விழுந்ததை ஈராக் ராணுவம் உறுதி செய்தது.
இந்தச் சம்பவத்தில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்தது.
ஏவுகணைகள் விழுந்ததைத் தொடர்ந்து அபாய ஒலி முழங்கியதாகவும் விழுந்த ஏவுகணைகளில் ஒன்று அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விழுந்ததாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கத்துஸ்யா ரக ஏவுகணைகளில் இரண்டு மட்டும் பாக்தாத்தின் பாதுகாப்பு வட்டாரத்தில் விழுந்து பீதியைக் கிளப்பியது. நள்ளிரவுக்குப் பின் திடீரென குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடிக்கும் சத்தமும் அதனைத் தொடர்ந்து அலறும் அபாய ஒலியும் அப்பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படையினர் தங்கியிருக்கும் குடியிருப்புப்பகுதிகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் ராணுவத் தலைவர் காசிம் சுலைமானியும் ஈரானின் படைத் தளபதி அபு மஹ்டி அல்-முகண்டிசும் கடந்த வாரம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டது.
இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னணியாக ஹாஷித் குழு செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
பாக்தாத் ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்ளப் படும் என்று ஹாஷித் குழு முன்னதாக அறிவித்திருந்தது.
அந்தக் குழுவின் தீவிர ஆதரவுக் குழுவான ஹரக்கட் அல்-நுஜபா, முகண்டிஸ் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க உறுதி பூண்டுள்ளது.
அந்தக் குழு அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் "அமெரிக்க ராணுவ வீரர்களே, உங்கள் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். உங்களில் இறுதி வீரன் ஈராக் மண்ணைவிட்டு ஓடும் வரை எங்களது பழிவாங்கும் போர் தொடரும்," என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் பெண்டகன், "ஈரான் 16 குறுந்தொலைவு ஏவுகணைகளை ஈராக்கின் அல் அசாட் விமானத் தளத்தில் 11 இடங்களில் ஏவியுள்ளது. இந்தத் தாக்குதலால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை," என்று மழுப்பலாகக் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "எங்களிடம் சக்திவாய்ந்த ராணுவமும் ஆயுதங்களும் உள்ளன. அதற்காக நாங்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை.
"அமெரிக்கா ராணுவம், பொருளியல் இரண்டிலும் ஈடு இணையற்ற நாடாகத் திகழ்கிறது," என்றார்.
"எங்களுடைய வலுவான அமெரிக்கப் படையினர் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்.
"இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அமைதி காக்கிறது. இது இரு தரப்பினருக்கும் மட்டுமல்ல உலகிற்கும் நன்மை பயக்கும்," என்று மேலும் டிரம்ப் கூறினார்.

