உக்ரேனிய விமானம் ஒன்று புதன்கிழமை அன்று டெஹ்ரானில் விழுந்து நொறுங்குவதற்கு முன் அது ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டது என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று முன்தினம் கூறினார். உடனே அனைத்துலக நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் திரு ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஈரானிய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு உக்ரேனிய விமானம் விழுந்துள்ளதை எங்களின் நட்பு நாடுகள் மட்டுமன்றி எங்களின் சொந்த உளவுத்துறையும் ஆதாரம் திரட்டியுள்ளது," என்றார் திரு ட்ரூடோ. இது தற்செயலாகக் கூட நடந்திருக்கலாம் என்றார் அவர்.
தம்மிடமும் ஆதாரம் உள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். விமானம் விழுந்து நொறுங்கியதன் தொடர்பில் தமக்குச் சில சந்தேகங்கள் உள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரேனிய விமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலானவர்கள் கனடியர்கள். விசாரணையில் உக்ரேனும் போயிங் நிறுவனமும் ஈடுபட ஈரான் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்ததை ஈரானிய அதிகாரத்துவ ஊடகம் சுட்டியது.
விமானம் விண்ணுக்குப் பாய்ந்து சில நிமிடங்களில் விமான நிலையத்தின் அருகிலிருந்த ஓர் இடத்திலிருந்து இரு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டது, உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றில் பதிவாகியிருந்தது. இதையடுத்து வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஈரான் மறுப்பு
இதைத் தொடர்ந்து ஏவுகணை தாக்கி உக்ரேனிய விமானம் விழுந்து நொறுங்கவில்லை என்று ஈரானிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று கூறியது.
"விமானத்தை ஏவுகணை தாக்கவில்லை என்பது உறுதி," என்று ஆணையத்தின் தலைவர் திரு அலி அபெட்ஸடெ தெரிவித்தார்.
கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களின் உளவு வழி கண்டறிந்த தகவல்களுக்கு முரணாக ஈரானின் மறுப்பு அமைந்துள்ளது.

