ஆஸ்திரேலியா காட்டுத் தீ: ஏராளமானோர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியா காட்டுத் தீ: ஏராளமானோர் வெளியேற்றம்

2 mins read
24f44fed-dce8-4cf7-91f7-200aba4b4b9b
தங்களது வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் மல்லக்கூட்டா நகரவாசிகள், கூடவே தங்களுடைய செல்லப் பிராணிகளையும் அழைத்துச்செல்கின்றனர். படம்: இபிஏ -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயின் வேகம் ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக இந்த வாரத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுத் தீயின் நிலைமை கட்டுப்படுத்த முடியாத வகையில் மிக மோசமாகக் கூடும் என்று அந்நாட்டின் தேசிய பல்கலைக் கழகத்தின் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுக்கழகம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமடையும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியக் காடுகளில் எரியும் தீயைக் கட்டுப்படுத்துவதிலும் காடுகளுக்கு அருகேயுள்ள இடங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதிலும் அந்நாடு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடுமையான வெப்பம், பலத்த காற்று ஆகிய காரணங்களால் மேலும் புதிதாக கட்டுப்படுத்த முடியாத வகையில், பெரிய அளவில் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது.

எனவே காட்டுத் தீ எளிதில் பரவக்கூடிய இடங்களில் வசிக்கும் மில்லியன்கணக்கானோரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கிப் பலத்த காற்று வீசுவதால் அந்தப் பகுதியில் தீ எளிதில் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது.

அந்த வெப்பத்தால் மேலும் காடுகளின் பல இடங்களில் தீப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பற்றி எரியும் தீ, பலத்த காற்றால் அதிக இடங்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது.

இந்த அச்சம் காரணமாக விக்டோரியா மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

இப்போது கிளம்பியுள்ள புதிய தீ அச்சுறுத்தலால் காட்டை ஒட்டி உள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

இருப்பினும், சிலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற மனமின்றி அச்சத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதிக்கான அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ஆண்ட்ரூ கிரிப்ஸ், ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "காடுகள் சார்ந்த பகுதிகளிலும் தொடர்புகொள்ள முடியாத வகையில் தனித்திருக்கும் பகுதிகளிலும் குடியிருப்போர், தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டும்," என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் விக்டோரியா மாநிலத்தில் மட்டும் 240,000 பேருக்கு அவசர எச்சரிக்கைக் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, அதிக ஆபத்தை எதிர்நோக்கும் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களைச் சேர்ந்தோரும் உடனடியாக தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறுவது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

காட்டுத் தீ 10.3 மில்லியன் ஹெக்டர் அளவு நிலத்தையும் அதில் வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் பொசுக்கியுள்ளது; 27 பேர் மாண்டனர்; காடுகளில் வாழ்ந்த மில்லியன்கணக்கான உயிரினங்கள் மடிந்தன. நாடு முழுதும் தீப்பற்றி எரியும் 150 இடங்களில் தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். அவற்றில் நியூ சவுத்வேல்சில் மட்டும் 134 இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்பாளர்களுக்கு உதவும் வகையில் ராணுவம் அழைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.