கோலாலம்பூர்: தமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் சரியான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் திக்குத் தெரியாமல் தவித்து வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களை டாக்டர் மகாதீர் மறுத்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் பலனளிக்க இன்னும் ஈராண்டு காலம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு வலைப்பதிவு மூலம் நீண்ட விளக்கமளித்துள்ள டாக்டர் மகாதீர், "என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒரு சில வாரங்களில் திட்டங்களை உருவாக்கி விடலாம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த நீண்டகாலம் தேவை. குறைந்தது ஈராண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். ஆனால், அதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன," என்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் திக்குத் தெரியாமல் அல்லாடி வருவதாகக் குறைகூறுபவர்கள், நடைமுறை எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்றார் 94 வயதான திரு மகாதீர்.
டிரில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடன் சுமையைக் கொண்டுள்ளபோதும் நாட்டை நொடித்துப்போகாமல் தாங்கள் காப்பாற்றி வருவதை விமர்சகர்கள் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.
அத்துடன், அரசியல்ரீதியாகவும் நாடு நிலைத்தன்மை கொண்டதாக உள்ளது என்ற அவர், கூட்டணிக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றால் சில இடையூறுகள் ஏற்படுவது வழக்கமானதுதான் என்றும் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அரசாங்கத்தை அகற்ற எவரும் முயலவில்லை என்றும் அந்த முயற்சி கைகூடாது என்பதை அவர்களும் அறிவர் என்றும் அவர் சொன்னார்.
இடைக்கால கல்வி அமைச்சர்
இதனிடையே, மலேசியாவின் இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் மகாதீரே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 2ஆம் தேதி கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லி மாலிக் விலகினார். இதை அடுத்து, அந்தப் பொறுப்பில் இன்னொருவர் நியமிக்கப்படும் வரை அதை பிரதமரே கவனித்துக்கொள்வார் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

