உக்ரேன் பயணிகள் விமானத்தைத் தவறுதலாகச் சுட்டுவிட்டோம்: ஈரான்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்ப் பதற்றம் நிலவிய வேளையில் ஆகாயத்தில் இருந்து நொறுங்கி விழுந்த உக்ரேன் பயணிகள் விமானத்தைத் தவறுதலாகச் சுட்டுவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

விமானம் நொறுங்கியதில் அதிலிருந்த 82 ஈரானியர்கள், 63 கனடியர்கள், 11 உக்ரேனியர்கள் உள்ளிட்ட 176 பயணிகளும் விபத்தில் மாண்டனர். முதலில் இது விபத்து என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் விமானம் வீழ்த்தப்பட்டதாக கனடா சந்தேகம் எழுப்பியது. அமெரிக்காவும் அதேபோன்ற சந்தேகத்தை வெளியிட்டது.

உக்ரேன் விமானம் விழுந்து நொறுங்கியதற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று மறுப்பு வெளியிட்ட மறுதினமே ஈரான் அதற்கு மாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானிய புரட்சிப் படையின் ‘உணர்ச்சிமயமான ராணுவ மைய’த்தை நோக்கி அந்த விமானம் திரும்பியபோது எதிர்த்தாக்குதல் இலக்காக குறுந்தொலைவு ஏவுகணை மூலம் அது தாக்கி வீழ்த்தப்பட்டதாகவும் அது ஒரு மனிதத் தவறு என்றும் ஈரானிய ராணுவம் வெளியிட்ட அறிக்கை யை ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்த வேளையில் அந்த ராணுவப் பிரிவு உச்சக்கட்ட தயார்நிலையில் இருந்ததாகவும் அதுபோன்ற வேளையில் தெரியாத்தனமாகவும் மனிதத் தவறாலும் விமானம் தாக்கப்பட்டது என்றும் ராணுவ அறிக்கை குறிப்பிட்டது. 

இந்தத் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நேராவண்ணம் தாக்குதல் முறை சரிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்ட ராணுவம், தாக்குதலுக்குப் பொறுப்பானவர் தண்டிக்கப்படுவர் என்றது.

ராணுவ அறிக்கை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் உக்ரேன் விமானத் தாக்குதலுக்கு தமது புரட்சிப் படை பிரிவு முழுப்

பொறுப்பேற்பதாக அப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் அறிவித்தார். 

ஜெனரல் அமிர் அலி ஹாஜிஸாதே எனப்படும் அவர் ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கிடையே, தவறாக நடத்தப்பட்ட தாக்குதலை எண்ணி ஈரான் இஸ்லாமிய குடியரசு பெரிதும் வருந்துவதாகவும் மாண்டோர் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.