மகாதீர்: நஜிப் தொடர்பான ஒலிப்பதிவுகளை பகிரங்கமாக வெளியிட்டதில் தவறில்லை

லங்காவி: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஒலிப்பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதில் தவறில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது (படம்) தற்காத்துப் பேசியுள்ளார். 

1எம்டிபி முறைகேடு தொடர்பில் சில விஷயங்களை மூடிமறைக்க மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் திரு நஜிப் நடத்திய உரையாடல்கள் என்று நம்பப்படும் ஒலிப்பதிவுகள் அவை.

அதுபோன்ற ஒன்பது ஒலிப்பதிவுகளை கடந்த வாரம் புதன்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீஃபா கோயா வெளியிட்டார். 

அவற்றில் பதிவாகி இருந்த குரல்கள் திரு நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸுல்கிஃப்லி அகமது, நஜிப்பின் முன்னாள் முதன்மை அந்தரங்கச் செயலாளர் ஷுக்ரி முகம்மது சாலி ஆகியோர் நடத்திய உரையாடலுடன் தொடர்புடையது என்று தான் நம்புவதாக ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.

அந்த ஒலிப்புதிவுகளை பகிரங்கமாக வெளியிட்டது முறையான செயல்தானா என்று பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு மகாதீர், 2018ஆம் ஆண்டில் நஜிப், ரோஸ்மா ஆகியோர் தொடர்புடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட சோதனை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதற்கும் ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றார்.

முறைகேட்டு விவகாரம் நீதிமன்றம் வரை வந்து வழக்கு விசாரணை நடைபெறுவதால் அது தொடர்பான எந்தவோர் அம்சத்தையும் பொதுமக்களிடம் மறைக்கப்போவதில்லை என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். 

ஆறு இடங்களில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு 900 மில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$304 மில்லியன்) 1.1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$371 மில்லியன்) இடைப்பட்ட மதிப்புடையது என்று போலிசார் அப்போது தெரிவித்திருந்தனர். 

மலேசிய வரலாற்றில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் இதுவே ஆகப்பெரியது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

ரொக்கப் பணமும் நகைகளும் நிரப்பப்பட்ட ஏராளமான பைகள், நூற்றுக்கணக்கான ஆடம்பர கைப்பைகள் ஆகியன அதிரடி சோதனை களில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் உள்ளடங்கி இருந்தன.