தாய்லாந்து அரசாங்கத்துக்கு எதிராக பல்லாயிரம் பேர் ஒன்றுசேர்ந்து ஓட்டம்

தாய்லாந்து அரசாங்கத்துக்கு எதிராக பல்லாயிரம் பேர் ஒன்றுசேர்ந்து ஓட்டம்

1 mins read
3cd59631-759c-4435-a488-1c01ddf09dd0
Attendees of the Run Against Dictatorship event warming up in Bangkok, on Jan 12, 2020.ST PHOTO: HATHAI TECHAKITTERANUN தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நேற்று புதுமையான முறையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி ஓட்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்தவாறு பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். படம்: எஸ்டி, ஹத்தை -

பேங்காக்: தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நேற்று புதுமையான முறையில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி ஓட்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்தவாறு பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

திடல்தட விளையாட்டுக்கான உடையில் திரண்ட அவர்கள் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில் ஒன்றுகூடினர்.

'சர்வாதிகாரத்திற்கு எதிரான ஓட்டம்' என்ற பெயரிலான ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் ஓடியதாகவும் இந்நிகழ்ச்சிக்காக சுமார் 13,000 பேர் பதிவு செய்திருந்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

ஜனநாயகம் வாழ்க, பிரயுத் வெளியேறு என்னும் முழக்கங்களை எழுப்பியவாறு சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர்கள் ஓடினர். ஏற்கெனவே கடந்த மாதம் எதிர்த்தரப்பு அரசியல்வாதி தானா தோர்ன் ஏற்பாடு செய்த அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் பல்லாயிரக்

கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். கடந்த 2014ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் தளபதி பிரயுத் பதவி சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர் நடைபெற்ற ஆகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அது வரலாற்றில் இடம்பெற்றது.

41 வயது செல்வந்தரான தானாதோர்ன் பிரதமர் பிரயுத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார். கடந்த மாதம் சட்ட விரோதமாக பேரணி ஏற்பாடு செய்ததாக அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் பதிவு செய்யப்பட்டது. அவரது ஃபியூச்சர் ஃபார்வர்ட் கட்சி இம்மாத இறுதியில் கலைக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது.

எதிர்ப்பை முறியடிக்கும் விதமாக நேற்று அரசாங்க ஆதரவுப் பேரணி ஒன்றை பிரதமரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.