ஹாங்காங்கில் குழாய் குண்டு; மூவர் கைது

ஹாங்காங்: ஹாங்காங்கின் மோங் காக் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் குழாய் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்தக் குண்டு எவ்வித ஆபத்தையும் விளைவிக்காத வகையில் பாதுகாப்பாக செயல் இழக்கவைக்கப்பட்டது. 

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மூன்று பேரை காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவுசெய்துள்ளது. சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் மூன்று பேரில் இருவர் உயர்கல்வி மாணவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் தொடர்பு உள்ளது என்று நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. மூன்றாமவர் 29 வயது மின்சார ஊழியர் என்று கூறப்படுகிறது. இந்த மூவரும் ‌ஷெங் ‌ஷுய் என்னும் இடத்தில், குழாய் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டனர். அதே இடத்தில் அவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குழாய் குண்டு மிகவும் சக்திவாய்ந்தது என்றும் அது செயலிழக்க வைத்தபோது அந்தக் குண்டு சிறிய அளவில் வெடித்தது என்று காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் சான் டின்-சூ கூறினார். வெடிக்க வைக்கத் தயார் நிலையில் இருந்த அந்தக் குண்டை ஒரு வாகனத்தின் மீது எறிந்து வாகனத்தில் இருப்போரைக் கொல்லமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹாங்காங்கின் துங் சாய் தெருவில் உள்ள லீ மன் கட்டடத்தில் இருந்து வெளியானபோது அந்த மூன்று இளைஞர்களும் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான பொருட்களுடன் ஒரு குழாய் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அந்தக் குழாய் குண்டில் ஏறக்குறைய 40 கிராம் அளவுள்ள வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது.  இதற்கு முன் இதுபோன்ற குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

அத்துடன் கஞ்சா, குண்டு துளைக்காத சட்டைகள், முகக் கவசங்கள் போன்றவற்றையும் அவர்கள் கைப்பற்றினர்.

இந்தக் குண்டு தயாரிப்பு குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. 

தேவையேற்பட்டால் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக் குழுவினருடன் தொடர்புள்ள ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.