குடிநீரில் சொட்டு மருந்தைக் கலந்து கணவரைக் கொன்ற பெண்ணுக்கு 25 ஆண்டு சிறை

குடிநீரில் சொட்டு மருந்தைக் கலந்து கணவரைக் கொன்ற பெண்ணுக்கு 25 ஆண்டு சிறை

2 mins read
155378b0-d26b-41ce-b6b8-a2945aa193b5
பெண் ஒருவர் தமது கணவர் அருந்திய பானத்தில் கண்ணுக்குப் பயன்படுத்தும் சொட்டுமருந்தைக் கலந்துகொடுத்து கொலை செய்ததற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாதிரிப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெண் ஒருவர் தமது கணவர் அருந்திய தண்ணீரில் கண்ணுக்குப் பயன்படுத்தும் சொட்டுமருந்தைக் கலந்துகொடுத்து கொலை செய்ததற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 53 வயது லானா சூ கிளேட்டன் எனும் அந்த மாது நேற்று (ஜனவரி 16) இந்தக் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

'விசின்' எனும் கண் சொட்டு மருந்தை தம் கணவர் ஸ்டீவன் கிளேட்டன் அருந்திய தண்ணீரில் லானா கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக யார்க் கவுன்டி துப்பறிவாளர்கள் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுக்கு 'விசின்' கலக்கப்பட்ட தண்ணீரை லானா கொடுத்ததாகவும் அதன் விளைவாக ஸ்டீவன் இறந்துபோனதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தம் கணவர் தம்மைக் கொடுமைப்படுத்தியதாகக் குறிப்பிட்ட லானா, அவரைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் அவ்வாறு செய்யவில்லை என்றார். அந்த கலப்பட தண்ணீரை அருந்துவதன் மூலம் அவருக்கு உபாதைகள் ஏற்படும் என்று கருதியதாகவும் உயிரிழப்பார் என்று நினைக்கவில்லை என்றும் லானா கூறினார்.

தாதியாகப் பணியாற்றிய லானா நல்ல மனிதர் என்று குறிப்பிட்ட அவரது வழக்கறிஞர்கள், குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர் என்றும் ராணுவத் தளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மன அழுத்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட லானா, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விசாரணையின்போது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிளேட்டன் தம்பதி S$1.35 மில்லியன் மதிப்பிலான வீட்டில் வசித்துவந்ததாகவும் 64 வயதான ஸ்டீவன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மற்ற சொத்துகளை வைத்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திரு ஸ்டீவன் ஃபுளோரிடாவில் வர்த்தகம் புரிந்துவந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

'விசின்' கலந்த தண்ணீர் ஸ்டீவனைக் கொல்லும் என்று தெரிந்தே அவருக்கு கலப்பட நிரை லானா கொடுத்தார் என்றும் திரு ஸ்டீவனின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அவரது உயில்களை லானா அழித்துவிட்டார் என்றும் அரசுத்தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #கண்மருந்து #சொட்டுமருந்து #கொலை