பிலிப்பீன்சில் எரிமலை அச்சுறுத்தல் நீடிப்பு

மணிலா: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புகையைக் கக்கி வரும் பிலிப்பீன்சின் தால் எரிமலை இன்னும் உயிருக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனால், எரிமலையை ஒட்டிய பகுதிகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போதைக்கு மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கடந்த இரு நாட்களாக குறைந்த அளவிலான சாம்பலையே வெளியிட்டு வருவதைப் பார்க்கும்போது தால் எரிமலையின் சீற்றம் தணிந்துவிட்டதாகத் தெரியலாம். ஆனால், தொடர்ந்து காணப்படும் அதிர்வுகளும் அதன் வாய்ப்பகுதியில் இருந்த ஏரி வறண்டுபோனதும் வேறு சில அறிகுறிகளும் அந்த எரிமலையின் அடியில் குழம்பு நகர்ந்தபடி இருப்பதைக் காட்டுகின்றன,” என்று பிலிப்பீன்ஸ் எரிமலையியல், நிலநடுக்கவியல் நிலையத்தைச் சேர்ந்த திருவாட்டி மரியா அன்டோனியா போர்னாஸ் என்ற அதிகாரி தெரிவித்தார்.

எரிமலையின் சீற்றம் தணிந்து விட்டதா இல்லையா என்பதை மதிப்பிடவே இரு வாரகாலம் ஆகலாம் என்றார் அந்த நிலையத்தின் தலைவர் டாக்டர் ரெனாட்டோ சோடியம்.

பல கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் அபாயப் பகுதியில் இருந்து வெளியேறி விட்டனர். இப்போதைக்கு எரிமலையின் சீற்றம் தணிந்துள்ளதால் தங்களது உடைமைகளையும் கால்நடைகளையும் மீட்பதற்காக அவர்கள் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளனர்.

ஆனால், அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதால் ராணுவ வீரர்களும் போலிசாரும் பாதுகாப்பு வளையம் அமைத்து, அவர்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்ப விடாமல் தடுத்து வருகின்றனர்.

எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழப்பு அல்லது பெரியளவில் காயம் ஏற்பட்டதாக எவ்விதத் தகவலும் இல்லை. ஆனாலும், சாம்பல் சூழந்ததொரு சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் வீட்டைவிட்டு வெளியேற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading...
Load next