சுடச் சுடச் செய்திகள்

ராணுவத்தைத் தற்காத்துப் பேசிய ஈரான் தலைவர்

டெஹ்ரான்: ஈரானின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா காமேனி தமது நாட்டு ராணுவத்தின் நடவடிக்கையைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

அண்மையில் ஈரானிய புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியை பாக்தாத்தில் வைத்து அமெரிக்கா ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது.

அதற்குப் பதிலடி தரும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளைச் செலுத்தியது. அதிலொன்று, வானில் பறந்த உக்ரேனிய விமானத்தைத் தாக்கியதில் அதிலிருந்த 176 பேரும் மாண்டனர்.

அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என முதலில் மறுத்த ஈரான், பின்னர் விமானத்தை ஏவுகணை தாக்கியதை ஒத்துக்கொண்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய மக்கள், தமது நாட்டுத் தலைவர்களுக்கு எதிராகவே வீதிகளில் இறங்கிப் போராடினர்.

இத்தகைய சூழலில், கடந்த எட்டாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையை நேற்று தலைமையேற்று நடத்தினார் காமேனி. அப்போது உரையாற்றிய அவர், புரட்சிப் படை நாட்டின் பாதுகாப்பைக் கட்டிக்காத்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஏவுகணைத் தாக்குதலைத் தற்காத்துப் பேசிய அவர், “உலகின் ஆகப் பெரிய சக்தியாகத் திகழும் அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்தது ‘கடவுளின் கை’ இருப்பதைக் காட்டுகிறது என்பதே உண்மை. சுலைமானியைக் கொன்றது அமெரிக்காவின் பயங்கரவாத இயல்பைக் காட்டுகிறது,” என்று அவர் சொன்னார்.

“விமானம் விழுந்து நொறுங்கியதால் நாம் வருத்தத்தில் உள்ளோம். ஆனால், அதற்காக நமது எதிரி நாடுகள் (அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்) மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஈரானின் புரட்சிப் படை குறித்தும் ராணுவம் குறித்தும் கேள்வி எழுப்ப அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது. சுலைமானியைக் கொன்றதை மறைக்க அவர்கள் விமான விவகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்,” என்றார் அவர். இத்தகைய சூழலில், ஈரானியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

11 அமெரிக்க வீரர்கள் காயம்

வாஷிங்டன்: இம்மாதம் 8ஆம் தேதி ஈராக்கில் அல்-சாத் பகுதியில் அமைந்திருந்த அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

தனது படைகளுக்கு எவ்வித உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்கா முதலில் கூறியது.

இந்நிலையில், “ஈரானியத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. இருந்தாலும், தாக்குதலால் பலர் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று அமெரிக்க மத்திய தளபத்தியத்தின் பேச்சாளர் கேப்டன் பில் அர்பன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

உயரதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்த 1,500 அமெரிக்கப் படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் பதுங்குகுழிகளில் தஞ்சமடைந்ததாகக் கூறப்பட்டது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon