ஏமனில் ஏவுகணைத் தாக்குதல்: 70 ராணுவ வீரர்கள் பலி

ஏமனில் ஏவுகணைத் தாக்குதல்: 70 ராணுவ வீரர்கள் பலி

1 mins read
2b254258-1afe-4465-98ea-c06b42eaa424
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட இப்படம் ஏவுகணைத் தாக்குதலால் பற்றி எரியும் இடத்தைக் காண்பிக்கிறது. படம்: குலட் டைம்ஸ் -

துபாய்: ஏமன் நாட்டில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் பலியானதாக அந்நாட்டின் மருத்துவ மற்றும் ராணுவ வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏமனின் மத்திய மாகாணமான மரிப் ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வான்வழி மூலம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 70 ஏமன் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக ராணுவ வட்டாரம் கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அபேத்ராபோ மன்சூர் ஹாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான சபா செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏமன் அதிபர் கூறுகையில், "இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் பயங்கரவாதம் மிக்கது.

"ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இந்த இழிவான நடவடிக்கைகள் அவர்கள் சமாதானத்தை அடைய விரும்பவில்லை என்பதை சந்தேகமின்றி உறுதிப்படுத்துகிறது.

"மேலும் இப்பகுதியில் ஈரானின் கருவியாகவும் அவர்கள் இருக்கிறார்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு உடனடி பொறுப்பையும் ஏற்கவில்லை.

சவூதி அரேபியாவின் ராணுவ பலத்துடன் ஏமனின் அரசாங்கம் நடந்து வருகிறது. ஆயினும் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வடக்கு தலைநகரான சனாவைக் கைப்பற்றியதில் இருந்து அங்குத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல், அது நாட்டையும் பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.