சீனாவில் மேலும் 17 பேருக்கு மர்ம கிருமித் தொற்று: தமிழ்நாட்டிலும் விழிப்புநிலை

சார்ஸ் போன்ற தாக்கத்தைக் கொண்ட மர்ம வைரஸ் தொற்றிய 17 புதிய சம்பவங்கள் சீனாவில் பதிவாகி உள்ளதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்துள்ளது. 

கிருமி தொற்றிய மூவரின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அது குறிப்பிட்டது. சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் பல்லாயிரம் மக்கள் சீனாவுக்குத் திரும்புவதால் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.

மனிதர்களிடமிருந்து பரவும் தன்மை வாய்ந்த புதிய  வகை கொரோனா கிருமி, கடந்த 2002, 2003ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் ஹாங்காங்கிலும் 650 உயிர்

களைப் பலிவாங்கிய சார்ஸ் நோய் போன்ற கொடூரத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ள 17 கிருமித் தொற்றுச் சம்பவங்களும் சீனாவின் மத்திய பகுதி நகரான வூஹானில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மொத்தமாக இதுவரை வூஹானில் 62 பேருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டு இருப்பதாக அந்நகரின் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அவர்களில் எட்டுப் பேரின் உடல்நிலை கடுமையாக உள்ளதாகவும் 19 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டதாகவும் எஞ்சிய அனைவரும் மருத்துவ

மனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மர்ம கிருமியின் பாதிப்பால் இதுவரை இருவர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 52 வயது ஆடவர் ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வூஹான் சென்று திரும்பிய அவருக்கு புதிய வகை கொரோனா கிருமி தொற்றியுள்ளதா என்றறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

சிங்கப்பூரில் அவ்வகை கிருமித் தொற்று சந்தேகத்தின் பேரில் சோதிக்கப்படும் ஆறாவது நபர் அவர். எஞ்சிய ஐவர் கிருமித் தொற்றால் பாதிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுவிட்டது.

இதற்கிடையே, கொரோனா கிருமி தமிழகத்திற்குள் பரவி

விடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கும் எல்லாப் பயணிகளிடமும் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.