ஆஸ்திரேலிய காட்டுத் தீ: அவசரகால நிதியை அதிகரிக்கும் அரசு

1 mins read
4ac0e6bc-1a82-4805-9e2c-bdfd6133cd2f
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புழுதிக் காற்று வீசும் நிலையில், அங்குள்ள புதர் நிலத்தில் காணப்படும் சிறுமி. படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அவசரகால நிதியையும் கடன் தொகையையும் அந்நாட்டு அரசு அதிகரிக்கவுள்ளது.

சிறிய நிறுவனங்களுக்கான மானியம் 50,000 ஆஸ்திரேலிய டாலராக (S$46,300) அதிகரிக்கப்படவுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 15,000 டாலரைவிட இந்தத் தொகை கணிசமாக அதிகம்.

அந்நிறுவனங்களுக்கு 500,000 டாலர் வரையிலான கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராண்டு காலத்திற்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டி விதிக்கப்படாது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை 2 பில்லியன் டாலரை (S$1.85 பி.) அரசு செலவிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

"அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்யலாம்," என்று மையம் எச்சரிக்கை விடுத்தது.

விடுமுறை காலமான கடந்த மாதம் தொடங்கிய காட்டுத் தீயால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துறைக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டனர். அத்துடன், 2,500க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.