இரட்டையர் கூட்டம்; பலன் தராத கின்னஸ் சாதனை முயற்சி

இரட்டையர் கூட்டம்; பலன் தராத கின்னஸ் சாதனை முயற்சி

2 mins read
f842a0a6-b828-47ce-83f8-2d392ab8fbff
ஆண், பெண், பிள்ளைகள் என மூன்று வயது முதல் 89 வயது வரையிலான மூவாயிரத்துக் கும் அதிகமான இரட்டையர் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கத்தில் திரண்டு இருந்தனர். படம்: இலங்கை ஊடகம் -

இலங்கையில் அதிக இரட்டையர்கள் கூடி உலக சாதனை படைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தைவானில் கடந்த 1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 3,961 ஜோடி இரட்டையர்கள், 37 ஜோடி மூவர்கள் மற்றும் 4 ஜோடி நால்வர்கள் பங்கேற்றது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பபட்டது.

அந்தச் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சுகததாசா விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் ஏராளமான இரட்டையர்கள், மூவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மூன்று வயது முதல் 89 வயது வரையிலான 3,000க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வந்து குவிந்தனர்.

அதனால் இதில் பங்கேற்றவர்களை எண்ணும் பணி நீண்ட நேரம் நடந்ததாகக் கூறப்பட்டது. கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க சில நிபந்தனைகள் உண்டு.

இரட்டையர், மூவர் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் அல்லது அனைவரும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது ஒரே இடத்தில் ஒன்றுகூடி இருக்க வேண்டும் என்பன முக்கிய நிபந்தனைகள்.

ஆனால், ஏராளமாகக் கூடியவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் விவரங்களைச் சேகரிப்பதற்குள் காத்திருக்கப் பொறுமை இல்லாத பல இரட்டையர், மூவர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

அதிகமான வெப்பநிலையும் அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே கின்னஸ் சாதனை முயற்சிக்கு வெற்றி கிட்டியதா என்பது குறித்த தகவல் இல்லை. கின்னஸ் நிறுவனமும் இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

#தமிழ்முரசு #இலங்கை #இரட்டையர் #கின்னஸ்

குறிப்புச் சொற்கள்