ஹாங்காங்கில் அவசரநிலை; பள்ளிகள் மூடல்

ஹாங்காங்கில் அவசரநிலை; பள்ளிகள் மூடல்

2 mins read
33edf0a8-3e15-45df-9f3c-836ae4906e95
ஹாங்காங் எம்ஆர்டி நிலையங்களில் பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்ததை நேற்று காண முடிந்தது. படம்: இபிஏ -

ஹாங்காங்: வூஹான் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்க ஹாங்காங்கில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப் பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சீனப் புத்தாண்டு விடுமுறையை மேலும் நீட்டிக்கும்படி பல்கலைக்கழகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஹாங்காங்-வூஹான் இடையிலான அனைத்து விமான சேவைகளும் அதிவிரைவு ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்படவுள்ளன.

விமான நிலையத்திலும் அதி விரைவு ரயில் நிலையத்திலும் உடல் வெப்பநிலைப் பரிசோதனைக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் சுகாதார உறுதிமொழிப் படிவங்களைப் பூர்த்தி செய்யவேண்டும்.

அதிகாரத்துவ சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களும் சீனாவிற்கான அதிகாரபூர்வ பயணங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.

இருப்பினும், சீனாவிற்கான அனைத்து எல்லைகளையும் மூடுவது சாத்தியமற்றது என்ற அவர், முகக்கவச விநியோகம் போதுமான அளவில் இருக்க சீனாவின் உதவியை நாடியுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்த்து ஹாங்காங்கில் தொடர்ந்து ஏழாவது மாதமாகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் வூஹான் கிருமித் தொற்றுப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டது.

டாவோசில் நடந்த உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்து கொண்டபின் நாடு திரும்பிய சில மணி நேரங்களில் அவசரநிலையைப் பிறப்பித்தார் திருவாட்டி லாம்.

"இந்தத் தொற்றுநோய்க்கு எதிராக அனைவரும் இணைந்து போராடி, ஹாங்காங் மக்களின் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்," என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹாங்காங்கில் மட்டும் இது வரை அறுவருக்கு வூஹான் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 122 பேருக்கு அந்நோய்த்தொற்று கண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.