துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 35 ஆனது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 35 ஆனது

1 mins read
b5d4c8fe-c8f2-49af-b80e-190d0802faa0
கட்டட இடிபாடுகளில் இருந்து உயிருடன் ஒரு குழந்தையை மீட்கும் மீட்புப் பணியாளர். படம்: ராய்ட்டர்ஸ் -

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

இலாஸிக் மாநிலம், சிவ்ரிஸ் நகரில் உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.55 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 எனப் பதிவானது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலாஸிக் மாநிலத்தவர்கள். அண்டை மாநிலமான மலட்யாவிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறின. இந்த நிலநடுக்கத்தில் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்தான். 1999ஆம் ஆண்டு இஸ்மித் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 17,000 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய நிலநடுக்கத்தின்போது லெபனான், சிரியா, ஈரான் ஆகிய அண்டை நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பின் 400க்கும் அதிகமான நில அதிர்வுகள் பதிவாகி இருப்பதாக துருக்கி பேரிடர், அவசரநிலை நிர்வாக ஆணையம் தெரிவித்தது.

மீட்புப் பணிகள் நேற்று இரண்டாம் நாளாகத் தொடர்ந்தன. மீட்கப்பட்டவர்களுக்காக 9,500க்கும் அதிகமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.