ஜோகூர் பாரு: மலேசியாவில் வூஹான் கிருமித்தொற்று பரவலைக் கையாளப்படும் விதத்தை குறைகூறிய ஜோகூர் மன்னர், தான் நினைத்தது நடந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மலேசிய வாக்காளர்களை தான் எச்சரித்தது இப்போது நடந்துவிட்டதாக அவர் கூறினார். நாட்டில் வூஹான் கிருமித்தொற்று பரவலை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் எனப் பலர் தம்மைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்த மன்னர், "என்னால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். ஏனெனில், நான் மன்னராக நியமிக்கப்பட்டபோது அதன் தொடர்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்," என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அரசாங்கத்தை மாற்ற வேண்டாம் என வாக்காளர்களை எச்சரித்ததைச் சுட்டிய மன்னர், "இயந்திரம் முறிந்துபோனாலன்றி இப்போதிருக்கும் படகை மாற்ற வேண்டாம். படகை வழிநடத்தும் தலைவரையும் மாற்ற வேண்டாம். அதற்குப் பதிலாக படகுத் தலைவருடன் இணைந்து என்னைப் பணியாற்ற அனுமதியுங்கள்," என்று அப்போது தான் கூறியதை நினைவுகூர்ந்தார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு மலேசியாவுக்கு வந்த சீன நாட்டவர் நால்வருக்கு இந்தக் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பலரைக் கோபம் கொள்ள வைத்துள்ளது.
இது தற்பொழுது அந்நாட்டில் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதில் சீனாவிலிருந்து வரும் பயணிகளைத் தடுத்து நிறுத்தப்போவதில்லை எனப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியிருப்பதை வைத்து முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது ஃபேஸ்புக் பதிவில் மகாதீரைச் சாடியுள்ளார்.
இந்நிலையில், இணையத்தில் சீனப் பயணிகள் மலேசியாவுக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என்று கோரும் மனு ஒன்றில் நேற்று காலை நிலவரப்படி 360,000 பேர் கையெழுத்திட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் வூஹான் கிருமித்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் சீனாவிலிருந்து வந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்றும் அந்தக் குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனையிலிருந்து தப்பித்ததாக வந்த செய்தி பொதுமக்களிடையே கோபம் அதிகரித்துள்ளதற்குக் காரணம் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

